ரத்தன் டாடாவின் கனவு... டாடா இண்டிகாவுக்கு வயசு 20!

டாடா இண்டிகா... இந்தியாவில் இருப்பவர்கள் அனைவரும் ஒருமுறையாவது இந்த காரில் நிச்சயமாகப் பயணித்திருப்பீர்கள். ஏனெனில் பலருக்கு முதல் காராகவும், சிறிய டீசல் கார் வாங்க வேண்டும் என்பவர்களது பர்ஸ்ட் சாய்ஸாகவும், சொந்தமாக டாக்ஸி வாங்குபவர்களால் தவிர்க்க முடியாத கார் எனப் பலமுகங்களைக் கொண்டிருக்கிறது இண்டிகா! இந்த காருக்கு முன்னால் ஹிந்துஸ்தான் அம்பாஸடர் மற்றும் கான்டஸா - பிரிமியர் பத்மினி - மாருதி 800 மற்றும் 1000, ஆம்னி ஆகிய கார்கள் இருந்தன என்றாலும்,
 
 
 
 
அவை எல்லாமே வெளிநாடுகளில் விற்பனை செய்யப்பட்ட காரை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டவை. ஆராய்ச்சி-அபிவிருத்தி, வடிவமைப்பு, உதிரிபாகங்கள், டெஸ்ட்டிங், உற்பத்தி என ஒரு காரின் அனைத்து பணிகளும் இந்தியாவிலேயே மேற்கொள்ளப்பட்டு, விற்பனைக்கு வந்த முதல் கார் இண்டிகாதான்! தொடர்ச்சியாகப் புதிய கார்கள் வந்துவிட்டாலும், 20 ஆண்டுகளாகப் போட்டிமிகு இந்திய கார் சந்தையில் நீடித்து வருவது சாதாரண விஷயமல்ல! இந்தியா - கார் என்பதன் பெயர்ச் சுருக்கமே இண்டிகா!
 
 
1998 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவின் சூப்பர் ஸ்டார்:
 
 
சரியாக 20 வருடங்களுக்கு முன்னால், பிரகதி மைதானில் நடைபெற்ற 1998 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவின் தலைப்புச் செய்திக்குச் சமமான நிகழ்வு. அது 1998-ம் ஆண்டு, ஜனவரி மாதத்தின் 15-ம் நாள். அன்றைய காலை வேளை குளிராக இருந்தாலும், குப்பென்று வியர்த்திருந்தது 60 வயதான ரத்தன் டாடாவுக்கு. அதற்குக் காரணம் இருக்கிறது... அன்றுதான் கனரக வாகனங்களுக்குப் பெயர்பெற்றிருந்த TELCO (இன்றைய டாடா மோட்டார்ஸ்) நிறுவனத்தின் முதல் பாசஞ்சர் காரான இண்டிகா காட்சிபடுத்தப்பட்டது! இப்படிப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்கத் தருணத்தை மனதில்வைத்து, கிட்டத்தட்ட ஒரு ஏக்கர் இடத்தில் தனது ஸ்டாலை நிறுவியிருந்தது TELCO. இதுதான் அந்த எக்ஸ்போவின் மிகப்பெரிய ஸ்டாலாக இருந்தது.
 
என்றாலும், அன்றைய தினம் ரத்தன் டாடாவைச் சுற்றியிருந்த அவரின் நண்பர்கள் மற்றும் நிறுவன ஊழியர்கள், மத்திய அரசில் உயர்பதவிகளில் இருப்பவர்கள் ஆகியவர்கள் நிற்பதற்கு இடம் போதவில்லை. மேலும் அன்றைய மாருதி உத்யோக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் RSSLN பாஸ்கரடு, ஆனந்த் மஹிந்திரா (மஹிந்திரா & மஹிந்திரா), ராகுல் பஜாஜ் (பஜாஜ் ஆட்டோ), சிகே பிர்லா (AVTEC லிமிடெட்) என இந்திய ஆட்டோமொபைல் துறையின் பிக்-ஷாட்களும் அங்கே குழுமியிருந்தனர். 
 
 
 
 
உக்ரைன் நாட்டைச் சேர்ந்த நடனக்குழுவின் நிகழ்வு முடிந்த பிறகு, சிப்பிக்குள் இருக்கும் முத்துபோல, பலத்த கரகோஷங்களுக்கு மத்தியில் மேடையில் வெளிவந்தது, அடர் பச்சை நிற இண்டிகா! இங்கே சிறப்பு விருந்தினராக, அப்போதைய தொழில்துறை அமைச்சரான முரசொலி மாறன் வந்திருந்தார். ரத்தன் டாடா போலவே, அவரும் உணர்ச்சிமயமாக இருந்தார். 'இந்தியாவின் கோஹினூர் வைரம்' என அவர் ரத்தன் டாடாவைப் புகழ்ந்தார்.
 
இந்தியர்களின் கார் குறித்த எதிர்பார்ப்பிற்கான விடையாக இண்டிகா வெளிவந்ததைப் பற்றி ரத்தன் டாடாவிடம் கேட்டபோது, 'மாருதி ஜென் காரின் சைஸ் - அம்பாசடரின் கேபின் இடவசதி - மாருதி 800 காரின் விலை - டீசல் காரின் மைலேஜ் ஆகியவைதான், நாங்கள் இண்டிகா காரை உருவாக்கும்போது கவனத்தில் கொண்டவை' என்றார். அடிப்படையில் பஸ் மற்றும் டிரக்குகளைத் தயாரிக்கும் ஒரு நிறுவனத்திடமிருந்து, ஐரோப்பிய கார்களுக்கு இணையான டிசைனில் ஒரு கார் வெளிவந்தது என்பதையே, பலர் அப்போது நம்ப மறுத்தனர். ஏனெனில் அப்போதுதான் இந்திய பொருளாதாரம், தாராளமயமாக்கல் கொள்கைக்கு வந்திருந்தது. என்றாலும், தொழில்நுட்பத் தேவைகளுக்காக வெளிநாட்டு நிறுவனங்களுடன் கூட்டு சேர்வதற்கு பலர் தயங்கிய நிலையிலும், ரத்தன் டாடா துணிச்சலாக அந்த சவாலை எதிர்கொண்டார். 
 
 
 
 
இண்டிகாவின் வடிவமைப்பிற்காக, 'கார் டிசைனர்களின் மெக்கா' என்றழைக்கப்படும் இத்தாலியில் தங்கிய ரத்தன் டாடா, புகழ்பெற்ற ஆல்ஃபா ரோமியோ 155, லான்சியா டெல்டா, ஃபியட் டிப்போ, ஃபோர்டு மெவ்ரிக் ஆகிய கார்களை வடிவமைத்த I.D.E.A நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டார். 1998 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தந்த உத்வேகத்தில், அதே ஆண்டு ஜெனிவாவில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில், பிங்க் நிற இண்டிகாவைக் காட்சிபடுத்தினார். ஆக ஒரு இந்தியத் தயாரிப்பு, உலக அளவில் பலத்த அதிர்வலைகளைக் கிளப்பியது அதுதான் முதல் முறை. 1998-ம் ஆண்டின் இறுதியில், அதாவது டிசம்பர் 30-ம் தேதியன்று, 2.6 லட்ச ரூபாய்க்கு இண்டிகாவை அறிமுகப்படுத்தியது TELCO.
 
புக்கிங் தொடங்கிய சில நாட்களிலேயே, 1.10 லட்சம் கார்கள் முன்பதிவு செய்யப்பட்டதேல்லாம் வேற லெவல்! தவிர 3 மாதங்களுக்கு முன்னால் (செப்டம்பர் 23, 1998), ஹூண்டாய் நிறுவனமும் தனது முதல் காரான சான்ட்ரோவை, 2.99 லட்சம் ரூபாய்க்குக் களமிறக்கி இருந்தது. இவை எல்லாம் ஒன்று சேர்ந்து, இந்தியாவில் அப்போது (இப்போதும் கூட...) கார் விற்பனையில் முன்னணியில் இருந்த மாருதி உத்யோக் நிறுவனத்துக்கு மரண பயத்தைத் தந்தது. இதனாலேயே தனது 800 காரின் விலையை, தடாலடியாக 30 ஆயிரம் ரூபாய் குறைத்து வெளியிட வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டது.
 
 
இண்டிகா வெர்ஷன் 2.0 வின் அறிமுகம்:
 
 
'இந்திய நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட முதல் கார்' என்ற நற்பெயரால், இண்டிகா இந்திய மக்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனாலேயே அவர்கள் காரைப் பார்க்காமலேயே புக் செய்தனர். எல்லாமே சரியாக சென்றுகொண்டிருக்கிறது என TELCO நினைத்த வேலையில், ஒரு அதிர்ச்சி அவர்களை வரவேற்றது. முதற்கட்டமாகக் கார்களைப் பெற்றவர்கள், காரில் இருந்த பல பிரச்னைகளை முன்வைக்கத் தொடங்கினர்.இதற்கு கார் உற்பத்தியில் TELCO-வின் அனுபவமின்மையே காரணமாக அமைந்தது. ஏனெனில் கனரக வாகனங்களைத் தயாரிப்பதில் தேர்ச்சி பெற்றிருந்த TELCO, இண்டிகா மூலம்தான் கார் உற்பத்தியில் பிள்ளையார் சுழியைப் போட்டிருந்தது.
 
அந்நிறுவன ஊழியர்களும் அப்போதுதான் அதிகப்படியான டிமாண்டுக்கு ஏற்ப கார்களை உற்பத்தி செய்யக்கூடிய பயிற்சிகளைப் பெற்றுக்கொண்டிருந்தனர். இந்த இடைப்பட்ட காலத்தில், பிரச்னைகளின் எண்ணிக்கை நாளடைவில் அதிகரித்துக் கொண்டு போகவே, ஆரம்ப நாட்களில் இண்டிகாவுக்கு இருந்த வரவேற்பு மெல்லக் குறையத் தொடங்கியது. அப்போது கிடைத்த சம்மட்டி அடிதான், இன்று டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எவ்வளவு முன்னேறியிருந்தாலும், அதன் வளர்ச்சிக்கு இன்றளவும் தடைக்கல்லாக இருக்கிறது. 
 
 
 
 
இதனால் பலத்த மனஉளைச்சலுக்கு உள்ளான ரத்தன் டாடா, TELCO நிறுவனத்தின் கார் பிரிவை அப்படியே ஃபோர்டு நிறுவனத்திடம் விற்றுவிடலாமா என்ற யோசனையில் தீவிரமாக ஆழ்ந்தார். இந்நேரத்தில் இண்டிகாவின் ஆரம்ப கால டிசைன் கட்டத்தில் சொதப்பிய இந்நிறுவனத்தின் பொறியாளர்கள் குழு, ஆபத்பாந்தவனாக வந்து நின்றது. இவர்கள் இந்த காரின் உற்பத்தி முறையை முற்றிலுமாக மாற்றியமைத்து, டிசைனில் இருந்த சிறிய குறைகளைக் களைந்து, ஒட்டுமொத்த தரத்தில் கவனத்தைச் செலுத்தினர். இதன் வெளிப்பாடாக வந்த இண்டிகா V2, மக்களின் பேராதரவோடு மீண்டும் வெற்றிப்பாதையில் பயணிக்கத் தொடங்கியது.
 
முந்தைய மாடலைவிட இது தரமாக இருந்ததுடன், நம்பகத்தன்மையான தயாரிப்பாகவும் இண்டிகா V2 முன்னேற்றம் கண்டிருந்ததே இதற்கான காரணம். 'More Car Per Car' என்ற அடைமொழியுடன் வெளிவந்த இண்டிகா, அதற்கேற்ப குறைவான விலை - அதிக மைலேஜ் - குறைவான பராமரிப்புச் செலவுகள் என கொடுக்கும் காசுக்கு மதிப்புமிக்கக் காராக இருந்தது. ஆனால் அப்போதைய வெளிநாட்டு நிறுவனங்களின் போட்டி கார்களுடன் ஒப்பிடும்போது, இண்டிகா கொஞ்சம் பின்தங்கி இருந்தது என்னவோ உண்மைதான். 
 
 
நான் (இண்டிகா) வளர்கிறேன் மம்மி (டாடா):
 
 
2002 முதல் 2007.... இண்டிகாவின் பொற்காலம் எனலாம். ஏனெனில் இதே காரை அடிப்படையாகக் கொண்டு இண்டிகோ செடான், இண்டிகோ மெரினா எஸ்டேட் வேகன், இண்டிகோ காம்பேக்ட் செடான், இண்டிகோ XL என வரிசையாகக் கார்களை வெளியிட்டது டாடா மோட்டார்ஸ். இன்னும் சொல்லப்போனால், காம்பேக்ட் செடான் செக்மென்ட்டைப் புதிதாக உருவாக்கியதுடன் மட்டுமல்லாமல், முதல் ஆளாக சந்தைக்கு வந்ததும் இந்நிறுவனம்தான்! ஒருவேளை இண்டிகாவைப் பயன்படுத்தி ஒரு காம்பேக்ட் எஸ்யூவி அல்லது க்ராஸ்ஓவரை டாடா கொண்டு வந்திருந்தால், அதுவும் ஹிட்டடித்திருக்கும். ஐரோப்பிய நாடுகளுக்கும் இண்டிகாவை ஏற்றுமதி செய்த டாடா மோட்டார்ஸ், 2003-ல் பிரிட்டனைச் சேர்ந்த MG Rover நிறுவனத்துடன் கூட்டணி வைத்தது.
 
 
 
 
இண்டிகாவை சிட்டி ரோவர் என்ற பெயரில், பிரிட்டனில் இந்த கூட்டணி 4 வேரியன்ட்களில் (Solo, Sprite, Select, Style) விற்பனைக்குக் கொண்டுவந்தது. ஆனால் குறுகிய காலத்தில் அதிக லாபத்தைப் பெறும் நோக்கத்தில், MG Rover நிறுவனம் காரின் விலையை அதிகமாக நிர்ணயித்தது. இதனால் ஃபோர்டு கா, ஃபியட் ஃபாண்டா, ஹூண்டாய் கெட்ஸ், ஸ்கோடா ஃபேபியா, VW போலோ போன்ற பிரீமியம் கார்களுடன் போட்டிபோட நேர்ந்தது. மேலும் பிரிட்டனில் இருக்கும் ஆட்டோமொபைல் துறையினர், 'இந்திய சந்தைக்கு ஏற்ற இண்டிகா, சர்வதேச தரத்துக்கு இணையாக இல்லை' என ஒரே போடாகப் போட்டுவிட்டனர். இதன் வெளிப்பாடாக, அறிமுகமான நாள்முதலே விற்பனையில் பின்தங்கியது சிட்டி ரோவர். 
 
 
 
 
இதனால் அடுத்த தலைமுறை இண்டிகாவை, ஐரோப்பிய சந்தையை மனதில்வைத்து வடிவமைத்தது டாடா மோட்டார்ஸ். அதற்கேற்ப இந்நிறுவனத்தின் இரண்டாம் தலைமுறை X1 ப்ளாட்ஃபார்மில் கட்டமைக்கப்பட்ட இண்டிகா விஸ்டா, முந்தைய மாடலுடன் ஒப்பிடும்போது கட்டுமானம் மற்றும் பாதுகாப்பு வசதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. என்றாலும், அது விஸ்டாவின் விலை மற்றும் எடையை கணிசமாக அதிகரித்துவிட்டது.
 
இதனால் முந்தைய இண்டிகாவை விடப் பலமடங்கு தரமான தயாரிப்பாக விஸ்டா இருந்தாலும், இண்டிகாவுக்குக் கிடைத்த அதிரடி வெற்றி விஸ்டாவுக்குக் கிடைக்கவில்லை என்பதே நிதர்சனம். 2008 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இண்டிகா விஸ்டா காட்சிபடுத்தப்பட்டாலும், 10 வருடங்களுக்கு முன்பு இண்டிகா செய்ததை, நானோ அந்த எக்ஸ்போவில் செய்தது! மேலும் பார்க்க முந்தைய மாடலைப் போல இருந்ததுடன், காரில் பெயரில் இண்டிகா இருந்ததால், பலர் இதனை இண்டிகாவின் பேஸ்லிஃப்ட் என்றே கருதினர்.
 
 
 
 
இதனைச் சீர்படுத்தும் பொருட்டு, இண்டிகா விஸ்டாவுடன் இண்டிகாவையும் தொடர்ந்து விற்பனை செய்தது டாடா மோட்டார்ஸ். இது இண்டிகாவின் விற்பனையை அதிகரித்ததே தவிர, விஸ்டாவின் விற்பனைக்குப் பாதகமாகவே அமைந்தது. தவிர இண்டிகாவின் பார்முலாவைக் கொண்டு, ஸ்டைலான மற்றும் தரமான போட்டியாளர்கள் வந்ததும், விஸ்டாவின் வீழ்ச்சிக்கு ஒரு காரணம். எனவே இண்டிகா போலவே, விஸ்டாவை அடிப்படையாகக் கொண்டு மான்ஸா செடானைக் களமிறக்கியது டாடா. இது இண்டிகோ XL விடத் தரம், சொகுசு மற்றும் நம்பகத்தன்மையில் அசத்தினாலும், இண்டிகோ காம்பேக்ட் செடானே அந்த காருக்கு எதிரியாக மாறியதுதான் முரண். 
 
 
போல்ட், ஜெஸ்ட், நெக்ஸான் - X1 ப்ளாட்ஃபார்ம்:
 
 
எனவே விற்பனையை அதிகரிக்கும் நோக்கில், மறுபடியும் மாற்றத்துக்கு ஆளானது இண்டிகா. இம்முறை தனது புதிய 'Horizonext' கோட்பாடுகளின்படி X1 ப்ளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட்ட போல்ட் ஹேட்ச்பேக் மற்றும் ஜெஸ்ட் காம்பேக்ட் செடான் ஆகிய கார்களைக் களமிறக்கியது டாடா மோட்டார்ஸ். இந்நிறுவனத்தின் வரலாற்றிலே முதன்முறையாக டர்போ பெட்ரோல் இன்ஜின் மற்றும் AMT கியர்பாக்ஸைக் கொண்டிருந்த ஜெஸ்ட், போட்டிமிகுந்த காம்பேக்ட் செடான் செக்மென்ட்டில் ஓரளவுக்கு வெற்றி பெற்றது. ஆனால் பார்ப்பதற்கு விஸ்டா போலவே இருந்த போல்ட், கடும் தோல்வியைச் சந்தித்தது. இவை இரண்டுமே டாடாவின் அடுத்த தலைமுறை கார்கள் எப்படி இருக்கும் என்பதைப் பறைச்சாற்றும்படி அமைந்திருந்தன.
 
 
 
 
அதுவும் சர்வதேச EuroNCAP அமைப்பு நடத்திய க்ராஷ் டெஸ்ட்டில், 4 ஸ்டார் ரேட்டிங் வாங்கியது எல்லாம் வேற லெவல்! என்றாலும், நாளடைவில் அவை விற்பனையில் பின்தங்கிவிட்டன. எனவே இழந்த இடத்தை மீட்டெடுக்க, அதே X1 ப்ளாட்ஃபார்மில் புதிய அஸ்திரத்தை தயாரித்தது டாடா மோட்டார்ஸ். நெக்ஸான் எனப் பெயரிட்டப்பட்ட அந்த கார், காம்பேக்ட் எஸ்யூவி பிரிவில் வெளிவந்தது. இது டாடாவின் சமீபகால வரலாற்றில் அதிகமாக விற்பனையான கார் என்ற இடத்தைப் பெற்றதற்கு, இதன் அட்டகாசமான டிசைன்தான் பிரதான காரணி. 
 
 
டியாகோ, டிகோர் - அடுத்த தலைமுறை இண்டிகா:
 
 
இண்டிகாவின் X0 ப்ளாட்ஃபார்மை முற்றிலுமாக மாற்றியமைத்து, டாடா மோட்டார்ஸ் வெளியிட்ட கார்கள்தான் டியாகோ ஹேட்ச்பேக் மற்றும் டிகோர் காம்பேக்ட் செடான். இண்டிகாவுக்கும் இவற்றுக்கும் எந்த ஒற்றுமையும் இல்லாவிட்டாலும், 2,400 மிமீ வீல்பேஸ் பொதுவானதாக இருக்கிறது. 'இந்திய குடும்பங்களுக்குக் கட்டுப்படியாகக்கூடிய விலையில், அந்த விலைக்கு எவ்வளவு பெரிய காரைத் தரமுடியுமோ, அதை மக்களுக்குத் தரவேண்டும்' என்கிற ரத்தன் டாடாவின் கனவுக்கு, தரமான மற்றும் ஸ்டைலான விடையாக வெளிவந்திருக்கின்றன டியாகோ மற்றும் டிகோர். இத்தனை மாற்றங்கள் நிகழ்ந்தாலும், இவை அனைத்துடன் இண்டிகாவும் தாக்குப் பிடித்துக் கொண்டிருக்கிறது என்பதே பெரும் சாதனைதான்;
 
 
 
 
ஏனெனில் இந்த காருக்குச் சமமான போட்டியாளர்களாக இருந்த எந்த காரும் தற்போது உற்பத்தியில் இல்லை! முந்தைய காலகட்டத்துடன் ஒப்பிடும்போது இதன் விற்பனை எண்ணிக்கை குறைந்திருந்தாலும், இன்றும் கூட டாக்ஸி மார்க்கெட்டில் கெத்தாக வீற்றிருக்கிறது இண்டிகா. X0 மற்றும் X1 ப்ளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட்டிருக்கும் டாடா கார்கள், இதுவரை 2 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கிறது. தவிர இதே இண்டிகாவைக் கொண்டுதான், ஒருகாலத்தில் வாடிக்கையாளர்களின் அவப்பெயரைச் சம்பாதித்துக் கொண்டிருந்த நிறுவனத்தைத் தூக்கிநிறுத்தி, அதே ஃபோர்டிடம் இருந்து ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் பிராண்ட்களை வாங்கினார் ரத்தன் டாடா! அந்த நம்பிக்கையில்தான் டாடா மோட்டார்ஸ் மற்றும் இண்டிகா, தமது கார்களின் Smiling Grille போலவே புன்சிரிப்புடன், இந்திய கார் சந்தையில் ஜப்பானியர்களோடு போட்டி போட்டுக் கொண்டிருக்கிறது. 
 
 
- ராகுல் சிவகுரு.