புது ஹூண்டாய் ஐ20 எலீட் (I20 Elite)

புது ஹூண்டாய் ஐ20 எலீட் (I20 Elite)

Hyundai i20 elite

ஹூண்டாயின் புதிய ஐ20 எலீட் கார் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியின் எக்ஸ்-ஷோரூம் விலையில் ஐ20 எலீட்டின் பெட்ரோல் இன்ஜின் கார் Rs 5.34 லட்சம் முதல் 7.90 லட்சம் எனவும், டீசல் கார் விலை Rs 6.73 லட்சம் முதல் Rs. 9.15 லட்சம் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த காரில் வரும் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கூட்டணி 83bhp பவரையும், 11.5 kgm டார்க்கையும் தரவல்லது. இதில் உள்ள 1.4 லிட்டர் டீசல் இன்ஜின் மற்றும் 8 ஸ்பீடு கியர் பாக்ஸ் கூட்டணி 89bhp பவரையும் 21.9 kgm டார்க்கையும் தரும். எலீட் ஐ20-யின் டிசைன் அம்சங்களாக ஷார்ப்பான DRL உடன் கூடிய LED ப்ரோஜக்டர் ஹெட்லைட்டுகள், டூ பீஸ் டெயில் லைட், 16 இன்ச் அலாய் வீல், கருப்பும் சிகப்புமாக இரண்டு வண்ணங்கள் கொண்ட ரியர் பம்பர் போன்ற மாற்றங்கள் உள்ளன. காரின் உள்பக்கத்தில் black மற்றும் Beige நிறம் கலந்த இரண்டு வண்ண இன்டீரியர் வேலைப்பாடுகள், 7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், Arkamys நிறுவனத்தின் 8 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம், ஆண்டராய்ட் ஆட்டோ, ஆப்பில் கார்பிலே என்று பல வசதிகள் உள்ளது. பாதுகாப்பைப் பொருத்தவரை இரண்டு ஏர் பேக்கும், ஏபிஎஸ் வசதியும் அனைத்து வேரியண்டிலும் உள்ளது. விலை உயர்ந்த வேரியண்டில் 6 ஏர்பேக் வசதி உள்ளது. கூடுதலாக ஹூண்டாய் நிறுவனம் எலீட் ஐ20 வாங்குபவர்களுக்கு மூன்று ஆண்டு/11 லட்சம் கி.மீ வாரண்ட்டி தரவுள்ளது.

 

ஹூண்டாய் அயனிக் (Ioniq)

Hyundai Inoniq

ஐ20 எலீட் காருடன் ஹூண்டாய் தனது அயனிக் ஹைப்ரிட் மற்றும் மின்சார காரை அறிமுகப்படுத்தியுள்ளது. அயனிக் மின்சார காரின் 120 bhp, 29.5 kgm டார்க் வெளிப்படுத்தும் எலெக்ட்ரிக் மோட்டார் இருக்கிறது. இந்த கார் 9.9 விநாடியில் 0-100 கி.மீ-யை எட்டுமாம். ஃபுல் சார்ஜில் 280 கி.மீ தூரம் வரை பயணிக்கலாம், இதன் டாப் ஸ்பீடு 165 கி.மீ என்று சொல்கிறது ஹூண்டாய். ஹைப்ரிட் காரை பொருத்தவரை 43hp பவரும்17 kgm டார்க்கும் தரும் மோட்டார் உள்ளது. இந்த மோட்டாருக்கு 1.56kWh lithium-ion-polymer பேட்டரியில் இருந்து பவர் கிடைக்கிறது. இன்ஜின் மற்றும் மோட்டார் சேர்ந்து 139hp பவரும் 26.5kgm டார்க்கும் இந்த காரில் இருந்து கிடைக்கும். இதன் டாப் ஸ்பீடு 185 கி.மீ.

தற்போது இந்தியாவிற்கு ஹைப்ரிட் காரை மட்டுமே கொண்டுவர முடிவுசெய்துள்ளதாம் ஹூண்டாய்.

கியாவின் (Kia) முதல் கார்..

 

Kia

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வருவதாக உத்தேசித்து தள்ளிபோய்கொண்டிருந்த கியாவின் இந்திய பிரவேசம் துவங்கிவிட்டது. கொரிய நிறுவனமான கியா மோட்டார்ஸ் இந்தியாவுக்கான தனது முதல் காரை அறிமுகப்படுத்தியுள்ளது.

SP எனப்படும் கான்சப்ட் எஸ்யூவிதான் இது. முன்பே டீசர் படங்களை வைத்து மிரட்டியிருந்தாலும், நேரில் பார்க்க கார் மிகவும் அகலமாகவும், பெரியதாகவும் உள்ளது. முன் பக்கத்தில் டைகர் நோஸ் க்ரில், ஷார்ப்பான டிசைன் - ஆஜானுபாகுவான பாடி லைன் - சாய்ந்து இருப்பதைப் போன்ற c-pillar மற்றும் ரூஃப் - காரின் முன்பக்கம் மற்றும் பின்பக்கத்தில் கியாவின் ஆப்டிமா கரை போன்ற உள்ள மெல்லிசான LED லைட்கள், பெரிய பனி விளக்கு, தடிமனான வீல் ஆர்ச், டைமண்ட் கட் அலாய் வீல், காரின் கலருக்கு முரணான கலரில் ரூஃப் என கணிசமான அம்சங்கள் அசத்தலாக உள்ளது. '' இந்திய பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டு, நவீனமான பாணியில் டிசைன் செய்யப்பட்டிருக்கும் எஸ்யூவி '' என இதைத் தெரிவித்துள்ளது கியா மோட்டார்ஸ்.

தற்போது வைக்கப்பட்டுள்ளது கான்சப்ட் என்பதால் இதில் இருக்கும் சில அம்சங்கள் தயாரிக்கப்படும் காரில் இருந்து வேறுபடலாம். 2019-ல் சந்தைக்கு வரவிருக்கும் இந்த காரின் இன்ஜின் பற்றிய தகவல்களை இன்னும் வெளியிடவில்லை இந்நிறுவனம். மேலும் கியாவின் ஸ்டாலில் உலக சந்தையில் அறிமுகப்படுத்த வைத்துள்ள 16 புதிய மாடல் கார்களும் உள்ளது.