ஆல் நியூ ஸ்விஃப்ட் - சொடக்குமேல சொடக்கு போடுது....

டெல்லியை அடுத்த கிரேட்டர் நொய்டாவில் நடக்கவிருக்கும் ஆட்டோ எக்ஸ்போவைப் பார்க்க வருபவர்கள், தவறாது பார்க்க விரும்பும் கார், ஆல் நியூ ஸ்விஃப்ட். நம் நாட்டில் ஸ்விஃப்ட் அறிமுகமாகி 13 ஆண்டுகளாகிவிட்டன.  ஸ்விஃப்ட் இல்லாத சாலைகளையே பார்க்க முடியாது என்கிற அளவுக்கு வாடிக்கையாளர்களால் அதிகம் நேசிக்கப்படும் கார் என்ற அந்தஸ்தைப் பெற்றுவிட்டது. ஆரம்பத்தில் வெறும் 1.3 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் மட்டும் வெளிவந்த ஸ்விஃப்ட், 2007-ம் ஆண்டு 1.3 லிட்டர் டீசல் இன்ஜினை அறிமுகம் செய்தது. இதையடுத்து, 2010-ம் ஆண்டில் 1.2 லிட்டர் K-சீரிஸ் பெட்ரோல் இன்ஜினை அறிமுகப்படுத்தியது. கடைசியாக, 2014-ம் ஆண்டில்கூட ஒரு சில மாற்றங்களோடு களமிறங்கியது. இப்படித் தொடர்ந்து மாற்றங்களைக் கண்டுகொண்டிருக்கும் ஸ்விஃப்ட், மீண்டும் புது அவதாரம் எடுத்திருக்கிறது. இப்போது அறிமுகமாகியிருக்கும் ஸ்விஃப்ட், மூன்றாம் தலைமுறை மாடல்.  முதல் பார்வையிலேயே ‘வாவ்’ என ஆச்சர்யப்பட வைத்துவிட வேண்டும் என்ற குறிக்கோளோடு, சில புதிய முயற்சிகளை எடுத்திருக்கிறது மாருதி சுஸூகி.  

மாருதியின் முயற்சி ஸ்விஃப்ட்டின் வடிவமைப்பில் இருந்தே துவங்குகிறது. ஃப்ளோட்டிங் ரூஃப் மற்றும் முழுக்க முழுக்கக் கறுப்பு வண்ணத்தில் இருக்கும் கிரில் ஸ்விஃப்ட்டுக்கு ட்ரெண்டிங்கான தோற்றத்தைக் கொடுக்கிறது. பின்னிருக்கைகளின் கதவுப்பிடி சற்றே மேலே நகர்ந்து C-பில்லருக்குச் சென்றுவிட்டது. அதனால் பக்கவாட்டில் இருந்து பார்க்கும்போது ‘2 டோர் லுக்’ கொண்ட கார்களைப் போன்ற ஒரு தோற்றத்தைக் கொடுக்கிறது.